Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய உதவி கமிஷனர் உள்பட 29 போலீசாருக்கு பாராட்டு: கமிஷனர் அருண் வெகுமதி வழங்கினார்

சென்னை: சென்னையில் போதை பொருள் ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய உதவி கமிஷனர் உள்பட 29 போலீசாரை நேரில் அழைத்து கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார். சூளைமேடு பகுதியில் போதை பொருள் விற்ற பாஜ மாநில பெண் நிர்வாகி மகன் பூர்ணசந்திரன் (21), பிரதாப், ஜனார்த்தனன் (27), அப்துல் வாசிம் (22) ஆகியோரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா சிங், உதவி ஆய்வாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ், தலைமைகாவலர் ராம்திலக், காவலர்கள் அஸ்வின் குமார், சுதாகர், நவீன்குமார், வேல்முருகன் கைது செய்தனர்.

அதேபோல் அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி உதவி ஆய்வாளர்கள் ஜெயகணேஷ், மாதவன், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், பிரபாகரன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழு கடந்த மாதம் 8ம் தேதி கிண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஜெபஸ்டின், இசக்கி ராஜா, தளவாய் மதன், இசக்கி முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஓட்டேரி பகுதியில் பல்வேறு கொலை வழக்குகளில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி யாதவ வீரா (எ) ஜானகிராமன் (38) என்பவரை கடந்த மாதம் 14ம் தேதி அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் தமிழ்வாணன், உதவி ஆய்வாளர்கள் நிர்மல்குமார், ரமேஷ்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர் முகமது யாசியா, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சிவபாலகுமார், தலைமை காவலர்கள் சந்திரசேகரன், சிவகுமார், தேவஸ்ரீகுப்புராஜ் ஆகியோர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா, ஒரு பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர அரியானா மாநிலம் போலீஸ் அகாடமியில் நடந்த 74வது அனைத்து இந்திய விளையாட்டு போட்டியின் ஆணழகன் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற சைதாப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் புருஷோத்தமன், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆயுதப்படை தலைமை காவலர் செல்வகுமார் என உதவி கமிஷனர் உள்பட 29 போலீசாரை கமிஷனர் அருண் தனது அலுவலகத்திற்கு நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கி கவுரவித்தார்.