10 பேர் குழுவை அனுமதிக்க வலியுறுத்தல்; திரிணாமுல் கோரிக்கையை நிராகரித்தது ஆணையம்: எஸ்ஐஆர் விவகாரத்தில் திருப்பம்
டெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்த நிலையில், சந்திப்பை நேரலை செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது. மேற்குவங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆர்) பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகத் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனை ‘சத்தமில்லாத கண்ணுக்குத் தெரியாத மோசடி’ என்று வர்ணித்துள்ள அக்கட்சி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மர்ம மரணங்கள் குறித்தும் கவலை தெரிவித்து வந்தது. இதுதொடர்பாகப் புகாரளிக்கத் தங்கள் கட்சிக் குழுவைச் சந்திக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள நிர்வாச்சன் சதனில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இச்சந்திப்பில் 5 பேர் கொண்ட குழு மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 10 எம்.பிக்கள் கொண்ட பட்டியலைத் திரிணாமுல் காங்கிரஸ் பிடிவாதமாக அனுப்பியுள்ளது. இதற்கிடையே, ‘எங்கள் கேள்விகளுக்குப் பொதுவெளியில் விடை கிடைக்க வேண்டும்; தேர்தல் ஆணையம் தனது வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க இச்சந்திப்பைத் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்’ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி சவால் விடுத்துள்ளார். ஆனால், இந்தக் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும், வழக்கமான நடைமுறைப்படியே மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


