Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை சென்னையில் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இதையடுத்து மிகவும் உடல் மெலிந்து காணப்பட்ட அவர், படப்பிடிப்புகளில் வழக்கம்போல் கலந்துகொண்டு நடித்தார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி சென்னையில் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென்று வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை பெருங்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடம்பில் நீர்ச்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர், நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென்று மரணம் அடைந்தார்.

அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்பட சில உறுப்புகள் செயலிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது. சின்னத்திரை நிகழ்ச்சியில் ரோபோ வேடம் அணிந்து நடித்ததால், அவரது பெயருடன் ரோபோ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. ரசிகர்கள் மத்தியில் ரோபோ சங்கர் என்ற பெயரில் பிரபலமானார். அவரது தனித்துவமான உடல்மொழியாலும், நகைச்சுவை நடிப்பாலும் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பல குரலில் பேசி அசத்தும் திறமை பெற்ற அவர், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிமிக்ரி செய்துள்ளார்.

கடந்த 2007ல் ரவி மோகன், பாவனா நடித்த ‘தீபாவளி’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகமான ரோபோ சங்கர், தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய்யுடன் ‘புலி’, அஜித் குமாருடன் ‘விஸ்வாசம்’, தனுஷுடன் ‘மாரி’, சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அசத்திய ரோபோ சங்கர், விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘சக்க போடு போடு ராஜா’ உள்பட பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் ஸ்கோர் செய்திருந்தார்.

கடைசியாக ‘சொட்ட சொட்ட நனையுது’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹீரோவாக ஒரு படத்திலும், குணச்சித்திர வேடங்களில் சில படங்களிலும் நடித்து வந்தார். அவரது மனைவி பிரியங்கா டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திரைப்படங்களிலும் நடிக்கிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, விஜய் நடித்த ‘பிகில்’ என்ற படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் இரங்கல்: ரோபோ சங்கரின் திடீர் மறைவையொட்டி நடிகரும், மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேற்றிரவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘ரோபோ புனைப்பெயர்தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனைவிட்டு நீங்கிவிடுவாயா நீ? உன் வேலை நீ போனாய், என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால், நாளை நமதே’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி சின்னத்திரை, வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: சின்னத் திரையிலிருந்து வளர்ந்து, தமிழ்ச் சினிமாவில் தனது தனித்துவமிக்க நகைச்சுவை திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் ‘ரோபோ’ சங்கர் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.