Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

இன்று (21.07.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் , அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபடவுள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இதில் நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க 574 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் உரிய கல்வித் தகுதியுடன் ஒளிவுமறைவற்ற முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பிட கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 34 பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 574 பணியிடங்களின் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள நபர்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் இன்று (21.07.2025) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறுவதற்கான இறுதி நாள் 04.08.2025 ஆகும். தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.