சமூக விரோத செயல்கள் அதிகரிப்பால் கல்லூரி மாணவர்கள் சங்க அறைகளுக்கு ‘சீல்’: கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூரச் செயல், கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் சங்கத்திற்காக ஒதுக்கப்பட்ட அறையில்தான் தொடங்கியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக விரோதச் செயல்களுக்கு மாணவர் சங்க அறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில், வழக்கறிஞர் சயன் பானர்ஜி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘பல கல்லூரிகளில் பல ஆண்டுகளாக மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
அதனால், பெரும்பாலான மாணவர் சங்கங்கள் செயலிழந்துவிட்டன. தற்போது மாநிலத்தில் எந்தக் கல்லூரியிலும் மாணவர் பேரவை முறையாகச் செயல்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரத்தில் தெரியவந்துள்ளது’ என்று சுட்டிக்காட்டினார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மேற்குவங்க மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மாணவர் சங்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளையும் உடனடியாகப் பூட்டி சீல் வைக்க வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


