நாமக்கல்: கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்த எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் மோகன் குமார்(54). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் வேலை செய்யும் வெளியூர் போலீஸ்காரர்களுக்கு கொல்லிமலையை சேர்ந்த ஒருவர் சமையல் செய்து கொடுத்து வருகிறார். இவரது 19 வயது மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி மாணவி கல்லூரிக்கு புறப்பட்டார். அப்போது, எஸ்எஸ்ஐ மோகன்குமார் தனது காரில் அந்த மாணவியையும், அவரது தந்தையையும் அழைத்து சென்றார்.
முள்ளுக்குறிச்சி வந்ததும் மாணவியின் தந்தை சொந்த வேலையாக காரில் இருந்து இறங்கிக் கொண்டார். தொடர்ந்து மாணவியை மட்டும் மோகன் தனியாக காரில் அழைத்துச் சென்றார். அப்போது, ஓடும் காரில் மாணவிக்கு எஸ்எஸ்ஐ பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.
நாமக்கல் சென்றதும், காரில் இருந்து இறங்கி பஸ்சில் திண்டுக்கல் சென்று விட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று எஸ்எஸ்ஐ மோகன் குமார் மீது மாணவி புகாரளித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் வேதபிறவி வழக்குப்பதிந்து, எஸ்எஸ்ஐ மோகன் குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.