சென்னை: காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், கல்லூரி மாணவன் நிதின்சாய் என்பவரை கார் ஏற்றி கொலை செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மாணவன் சந்துரு சரண் அடைந்தார். ஜாமீன் கோரி, சந்துரு தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜூன் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்துரு இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது.
இதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி சந்துரு மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் புலன் விசாரணை முடிவடைந்துள்ளது. மனுதாரர் 45 நாட்கள் காவலில் உள்ளார். எனவே, ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் சந்துருவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தினமும் காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது. தலைமறைவாக கூடாது என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.