Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி டெல், ஏசர் நிறுவனங்கள் தேர்வு: முதற்கட்டமாக 10 லட்சம் வழங்க முடிவு, இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல்

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல் செய்ய சர்வதேச நிறுவனங்கான டெல், ஏசர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால் 2011ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் 2018ம் ஆண்டு நிதி பிரச்னை காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின், தற்போது விலையில்லா லேப்டாப் வழங்க முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியது. இந்த டெண்டரில், 20 லட்சம் லேப்டாப் தயாரித்து வழங்குதற்காக 3 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

சர்வதேச நிறுவனங்களான டெல், ஏசர் மற்றும் ஹெச்பி ஆகிய 3 நிறுவனங்களும் விண்ணப்பித்திருக்கின்றன. 8 ஜிபி ரேம் (டிடிஆர்-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (எஸ்எஸ்டி), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது ஏஎம்டி பிராசசர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720பி ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இதில் இடம்பெறவுள்ளது.

அதன்படி பல நிறுவனங்கள் தங்களது விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. இதில் டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினி (15.6 இன்ச் ஸ்கிரீன்) ரூ. 40826 என விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது. ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினி (14 இன்ச்) ரூ. 23,385 என சமர்ப்பித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. முதற்கட்டாக 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.