சென்னை: கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் சந்துருவின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காதல் விவகாரத்தில் அயனாவரம் கல்லூரி மாணவர் நிதின்சாயை கார் ஏற்றி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாமீன் கோரி சந்துரு தாக்கல் செய்த மனு கடந்த ஜூனில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்துரு, 2-வது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மனுதாரர், நண்பர்கள் வந்த கார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் காரை வேகமாக இயக்கினர். துரதிர்ஷ்டவசமாக நிதின்சாய் பயணித்த டூவீலர் மீது கார் மோதியது; மனுதாரர் காரை ஓட்டவில்லை. கல்லுாரி மாணவரான மனுதாரர் 26 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர், நண்பர்கள் காரில் துரத்தி சென்று மோதியதால் நிதின்சாய் இறந்ததாக போலீஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம். காரை நண்பர் ஓட்டினாலும், நிதின் சாய் மீது மோதத் தூண்டியது மனுதாரர் என தெரிவித்து சந்துருவின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.