கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; ஒடிசாவில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம்: ரயில் மறியல், பேரணியால் பதற்றம்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், ஒருங்கிணைந்த 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர். கல்லூரியின் கல்வியியல் துறை தலைவரான பேராசிரியர் சமீரா குமார் சாஹு, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி, கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து உயிரிழந்தார்.
இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜ அரசை கண்டித்தும், மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை நடத்தின. அனைத்து மாவட்டங்களிலும் பேரணி, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
சில இடங்களில் மாணவர் சங்கத்தினர், தெருக்களில் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் மோகன் சரண் மஜ்ஹியின் வீட்டிற்கு அரகே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.