Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலெக்டரின் உத்தரவு காற்றில் பறக்கிறது; மாட்டு தொழுவமாக மாறும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம்: பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திரமாக சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திலேயே அந்த உத்தரவு காற்றில் பறக்கிறது. மாடுகள் முட்டி உயிரிழப்பதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கவும் பிற துறைகளில் பணிகளுக்காக அதிகாரிகளை பார்க்க வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் அலுவலக நுழைவு வாயிலேயே தஞ்சம் புகுந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலக வாயிலில் கலெக்டர் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அலுவலகங்களை சுற்றி ஏராளமான மாடுகள் சுற்றித் திரிந்து வருகிறது. மேலும் கலெக்டர் அலுவலகத்திலேயே மாடுகள் தஞ்சம் புகுவதால் அங்கேயே சாணம் போட்டும் அப்பகுதியை அசுத்தம் செய்து அதை பணியாளர்கள் மாட்டு தொழுவமாக மாறி சுத்தம் செய்யும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், மாடுகளுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகளும் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கி செல்லும்போது கூட்டம் கூட்டமாக முட்டுவது போல் வருவதால் அலறி அடித்துக் கொண்டு ஓடக்கூடிய சூழ்நிலையும் அங்கே காணப்படுகிறது.

கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சுற்றி திரியும் மாடுகளால் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர திருவள்ளூர் நகரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாடுகள் சாலைகளை ஆக்கிரமித்து சாலைகளில் படுத்தும் உறங்குவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் மாடுகளையே கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கண்டு கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.