Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலெக்டராக விருப்பம் தெரிவித்த மலை கிராம சிறுமிக்கு ஆபீசை சுற்றி காண்பித்த கலெக்டர்

*கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கலெக்டராக விருப்பம் தெரிவித்த மலை கிராம சிறுமியை, கலெக்டர் தனது காரில் ஏற்றி கலெக்டர் அலுவலகத்தை சுற்றி காண்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை ஊராட்சி, மணியம்பாடி மலை கிராமத்தை சேர்ந்தவர் திஷியா (8). இந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறாள். பெற்றோர் இல்லாத நிலையில், தனது பாட்டியுடன் சிறுமி திஷியா வசித்து வருகிறாள்.

இந்நிலையில், சிறுமி தனது உறவினர்களுடன் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பம் பெற வேண்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலகத்திற்கு சென்ற சிறுமி, அங்குள்ள அலுவலர்களை சந்தித்தார். அப்போது, தானும் படித்து கலெக்டர் ஆக போவதாக கூறினார்.

இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள், சிறுமி திஷியாவை கலெக்டர் தினேஷ்குமாரிடம் அழைத்து சென்றனர். அந்த சிறுமியிடம் பேசிய கலெக்டர், அவருக்கு இனிப்பு வழங்கி, நீ படித்து என்ன ஆக போகிறாய் என கேட்டார். அப்போது, சிறுமி திஷியா தானும் உங்களை போல கலெக்டர் ஆக போவதாக கூறினார்.

இதனை தொடர்ந்து, சிறுமியின் விருப்பப் படி தனது அலுவலக அறையை கலெக்டர் சுற்றி காண்பித்தார். பின்னர், சிறுமியை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு அழைத்து வந்த கலெக்டர், தனது காரில் முன் இருக்கையில் சிறுமியை அமர வைத்து, கலெக்டர் அலுவலகத்தை சுற்றி காண்பிக்க செய்தார்.

தொடர்ந்து, சிறுமியிடம் பேசிய கலெக்டர், நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற வேண்டும். உயர் கல்வியிலும் சிறந்து விளங்கி கலெக்டர் ஆக வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.