ஊட்டி : முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கோத்தகிரியை சேர்ந்த இரு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கிக்கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 109 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோத்தகிரி கன்னேரிமுக்கு மற்றும் கொணவக்கரை பகுதியை 2 மாணவிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்.
மேலும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 2024-25 கல்வியாண்டில் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு விழாவினை சிறப்பாக முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சிறப்பாக கொண்டாடியதில் விழுதுகள் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கூடலூர் வட்டம், எருமாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுனில்குமாருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பழனிசாமி, கண்ணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.