நாகர்கோவில் : முட்டம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் நகர்புறங்களை போல ஊரக பகுதிகளிலும் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சிக்குட்பட்ட ஜேம்ஸ் நகர் சிவந்தமண் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் அந்தோணி ராஜ் என்பவரது வீட்டின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பயனாளியிடம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.