*சத்துணவு மையத்தில் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவு
கலசபாக்கம் : கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். அப்போது சத்தணவு மையத்தில் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பபணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கலசபாக்கம் ஒன்றியம் சீட்டம்பட்டு ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு மாணவர்களையும் பாடப்புத்தகங்களை வாசிக்க வைத்தார். மேலும் பாடங்கள் வாரியாக கற்றல் திறனையும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பள்ளியில் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் தொடர்ந்து சத்துணவு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு தரமாகவும் சுத்தமாகவும் தயாரித்து சூடாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தினமும் அதிகாரிகள் சத்துணவு மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் மணி, பிடிஓகல் பாலமுருகன் ராஜேஸ்வரி உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஏரிகள் புனரமைப்பு பணிகள் ஆய்வு
சீட்டம்பட்டு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள், சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.