Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

20 சதவீதம் வரை வசூல்; பசு பாதுகாப்பு வரியால் கொழிக்கும் பாஜ ஆளும் வட மாநிலங்கள்: ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வருவாய்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பாரில் மது அருந்திய ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு கடந்த வாரம் வைரலாகியது. அதில், பாரில் மது அருந்தியதற்கான பில்லை வெளியிட்டிருந்தார். மதுபானத்தின் விலை ரூ.2,650. ஒன்றிய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி தலா ரூ.36. ‘பசு செஸ்’ 20%, அதாவது ரூ.450. மொத்த பில் தொகை ரூ.3,262. ஜிஎஸ்டியை விட கூடுதலாக பசு செஸ் எனப்படும் ’பசு வரி’ விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பசு வரி சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மதுபான பாரின் ரெஸ்டாரண்ட் நிர்வாகி அளித்த விளக்கத்தில், 2018ம் ஆண்டு முதல் இந்த வரியை விதித்து வருகிறோம். மதுபானத்தின் மீது ஜிஎஸ்டிக்கு மேல் 20 சதவீதம் வாட் வரியாக விதிக்கப்படுகிறது. பீர் மற்றும் மதுபானங்களுக்கு மட்டுமே இந்த வரி உண்டு. இந்தப் பணத்தை அரசு இணையதளத்தில் பசு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க செஸ் ஆக செலுத்தி விடுவோம், என்றார். 2018ம் ஆண்டு வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜ அரசு இந்த வரியை அறிமுகம் செய்திருந்தது. பசு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக இந்த வரி விதிக்கப்படுகிறது என வசுந்தரா அரசு விளக்கம் அளித்திருந்தது.

பாஜ ஆட்சியாளர்கள் மக்களை விட பெரும்பாலும் பசு பாதுகாப்பு, பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். பாஜவின் இந்துத்துவ கொள்கைகளின்படி, பசு பாதுகாப்பு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ‘பசுக்காவலர்கள்’ என பலரும் விமர்சிக்கும் அளவுக்கு பசு பாதுகாப்புக்கான முக்கியத்துவத்தை பாஜ வழங்கி வருவது, மேற்கண்ட வரி விதிப்பு மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனை 25 சதவீதமாக்க ராஜஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பசு பாதுகாப்பு வரியால் ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி வருவாயை ராஜஸ்தான் அரசு ஈட்டுகிறது. ராஜஸ்தான் மட்டும் இதற்கு விதி விலக்கல்ல, பாஜ ஆளும் மாநிலங்கள் பல பசு பாதுகாப்பு, பராமரிப்புக்காக வரியை விதித்து வருகின்றன.

ஹரியானாவில் 2014ம் ஆண்டு முதல் பாஜ தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. 2023ம் ஆண்டு மே மாதம், மனோகர்லால் கட்டார் முதல்வராக இருந்தபோது பசு நலன் மற்றும் பாதுகாப்பு வரி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இந்த வரியில் வசூலிக்கப்படும் தொகை, கோசாலைகள் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பயன்படுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டது. இதுதவிர பசுக்களுக்கான தீவனங்கள், அவற்றை கொண்டு வருவதற்கான வாகனங்கள், பசு பராமரிப்பாளர்களுக்கு சம்பளம் ஆகியவற்றுக்கும் இந்த வரி பயன்படுத்தப்படும்.உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு ஆட்சிக்கு வந்ததும், பசு பாதுகாப்பு வரி அறிமுகம் செய்யப்பட்டது.

வேளாண் விளைபொருள் சந்தை குழுவுக்கு (மண்டி பரிஷத்) 2 சதவீத வரி விதிக்கப்பட்டது. 2020 ஜனவரியில் இது 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதுபோல் பசு மடங்கள் கட்டுவதற்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொகையையும் கோசாலைகள் அமைக்க உபி அரசு பயன்படுத்தியது. தோராயமாக ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை பசு பாதுகாப்பு வரி மூலம் உபி அரசு ஈட்டுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், பஞ்சாப் மாநிலத்திலும் பாஜ கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளத்தின் ஆட்சி பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் இருந்தபோது பசு பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக முதன் முதலாக செஸ் வரி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாநிலம் பசு செஸ் மூலம் எவ்வளவு வரி வசூலித்தது என்பதற்கான வெளிப்படையான புள்ளி விவரங்கள் இல்லாதபோதும், ரூ.1,000 கோடி வரை வருவாய் ஈட்டியிருக்கலாம் என சில தரவுகள் தெரிவிக்கின்றன. கார், டிரக், பஸ்கள் மற்றும் டூவீலர்கள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவற்றின் மீது இந்த வரி விதிப்பு அமலில் உள்ளது. மேற்கண்ட மாநிலங்கள் பசு செஸ் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3,000 கோடி ஈட்டுவதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்டவற்றின் மூலம் பல லட்சம் கோடியை ஒன்றிய அரசு வருவாயாக ஈட்டுகிறது. அதாவது, நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் ஒன்றிய அரசுக்கு ரூ.23.26 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. பாஜ ஆளும் மாநிலங்கள் ஜிஎஸ்டி மூலம் கணிசமான தொகையை பங்களிப்பாகப் பெறுகின்றன. மக்கள் நலத்திட்டங்களை விட வரி வசூலில்தான் ஒன்றிய பாஜ அரசு கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இதுபோல், பாஜ ஆளும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவுதான். அப்படியிருக்க, உள்கட்டமைப்பையும், மக்கள் வசதியையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக பசு பாதுகாப்பு வரியை வசூலித்து பசு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவத்தை பாஜ ஆளும் வடமாநிலங்கள் கொடுத்து வருவது பல்வேறு தரப்பிலும் விவாதங்களை கிளப்பியுள்ளது.