கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் இருமல் மருந்துகள் குறித்து விசாரணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, தாம்பரம் மாநகராட்சி, குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் தா.மோ அன்பரசன் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. 9வது வாரமாக நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 388 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 3 என்கிற விகிதத்திலும் சென்னை மாநகராட்சியில் 15 என்கிற அளவிலும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தத் திட்ட முகாம்கள் மூலம் 4,63,781 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரான இருமல் மருந்தை சாப்பிட்ட குழந்தைகள் வடமாநிலத்தில் உயிரிழந்துள்ளதால், அதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தற்போது விசாரணை செய்து வருகிறார். விசாரணை முடிந்த பின்னர் விரிவான தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காலாவதியான மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் உபகரணங்கள் போதிய அளவு இருப்பதற்கான ஏற்பாடை இன்னும் சில தினங்களில் நாங்கள் செய்து முடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். உடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமார் கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை உட்பட பலர் இருந்தனர்.