கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கடம்பாறை பகுதியில் காட்டு யானை ஊருக்குள் வந்துள்ளது. அங்கு வீட்டிற்குள் புகுந்து, அஞ்சலா (வயது 55) என்ற பாட்டியும், ஹேமாஸ்ரீ (வயது ஒன்றரை) என்ற பேத்தி ஆகியோரை யானை தாக்கியது. இதில் ஹேமாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாட்டி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த அக்கமபக்கத்தினர் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். படுகாயமடைந்த பாட்டியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த பாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலில், வீடு புகுந்து யானை தாக்கியது கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. வனத்துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கைகள் எடுத்து மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.