முதலமைச்சர் கோப்பை: கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த கோவை அணிக்கு ரூ.13.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
சென்னை: முதலமைச்சர் கோப்பை 2025 மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த கோவை அணிக்கு ரூ.13.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை 2025 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 16,28,338 பேர் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து, 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, இப்போது மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் 2 ஆம் தேதி 2025 முதல் 14 ஆம் தேதி 2025 வரை 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை மற்றும் செங்கல்பட்டு முதலிய 13 நகரங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 30,136 வீரர்களுக்கு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் கோவை மாவட்டம் முதலிடத்தையும், செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 13.5 லட்சத்திற்கான காசோலையும், இரண்டாம் பரிசாக ரூ.9 லட்சத்திற்கான காசோலையும், மூன்றாம் பரிசாக ரூ. 4.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை இன்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கி, பாராட்டினார். உடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் எல். சுஜாதா, துணை பொது மேலாளர் நோயலின் ஜான், நேரு விளையாட்டரங்க அலுவலர் பி. வெங்கடேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.