கோவை: கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி, கடந்த 2019ல் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஆண்டு நவ.26ம் தேதி இரவு அங்குள்ள பூங்காவில் காதலருடன் மாணவி பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல், தங்களை போலீசார் எனக்கூறி மிரட்டி, காதலனை சரமாரியாக தாக்கினர். மாணவியை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து, கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30), பப்ஸ் கார்த்தி (27), மணிகண்டன் (32), வடவள்ளி தில்லை நகரை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (29) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதியம்மாள் விசாரித்து, மணிகண்டன், கார்த்தி (எ) பப்ஸ் கார்த்திக், மணிகண்டன் (எ) ஆட்டோ மணிகண்டன் ஆகிய 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.