கோவை மாணவி கூட்டு பலாத்காரத்தில் கைதான சகோதரர்கள் 2 பேர் திருப்பூரிலும் தம்பதியிடம் அத்துமீறல் அம்பலம்: விசாரணையில் பரபரப்பு தகவல்
கோவை: கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரத்தில் கைதான சகோதரர்கள் 2 பேர் ஏற்கனவே திருப்பூரில் தம்பதியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சகோதரர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான சகோதரர்களான சதீஷ், காளி ஆகியோர் கடந்த ஆண்டு திருப்பூர் திருமுருகன் பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் ஒரு தம்பதியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சகோதரர்களான கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தவசி சேர்ந்துள்ளார். கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து பல வருடங்களாக திருட்டு, வழிப்பறி, அடிதடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த ஆண்டு திருப்பூர் திருமுருகன் பூண்டியில் தனிமையான இடத்தில் இருந்த ஒரு தம்பதியை அவர்கள் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பயம் காரணமாகவும், வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதியும் அவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இது கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோருக்கு தொடர்ந்து இதுபோன்று குற்றங்களில் ஈடுபட காரணமாக மாறிவிட்டது. அதன் பின்னரே கோவையில் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.
அவர்கள் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பகுதியில் அரிவாளுடன் வலம் வந்து வழிப்பறியில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் அங்கு வழிப்பறியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவர்கள் 2015ம் ஆண்டு திருப்பூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் காவலாளியை கொன்று அவரது மனைவியிடம் நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் குற்றவாளிகள் வரலாற்று பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீதுள்ள பல்வேறு வழக்குகளின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய கோர்ட்டில் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில் தடய அறிவியல் துறையிடமிருந்து விரைவில் அறிக்கைகள் கொடுக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 3 பேரின் நடமாட்டத்தைக் காட்டும் தெளிவான சிசிடிவி காட்சிகளும், மாணவி மற்றும் அவரது காதலனின் வாக்குமூலங்களும் வழக்கில் சேகரிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் இந்த வழக்கிற்கான முக்கிய ஆதாரமாக சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* தவறான முகவரி கொடுத்து எஸ்கேப்
குற்றவாளிகள் வரலாற்று பதிவேட்டில் சேர்க்கப்படும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஆனால் சிவகங்கை மாவட்ட போலீசார் அவர்களை கண்காணிக்க தவறியதாக தெரிகிறது. மேலும் இவர்கள் கைது செய்யப்பட்ட போது தவறான முகவரியை கொடுத்துள்ளனர். அதனை போலீசார் சரிபார்க்காமல் விட்டுள்ளனர். இதனால் அவர்கள் சுதந்திரமாக சுற்றி வந்து கைவரிசை காட்டி உள்ளனர்.
* மோட்டார் அறைக்கு சீல்
கோவை விமான நிலையம் அருகே மாணவி கத்தி முனையில் கடத்தப்பட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சுவர் ஏறிக்குதித்து அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு கழிவு நீர் தொட்டி அருகே மோட்டார் அறையில் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கல்லூரிக்கு சென்று சில ஆதாரங்களை சேகரித்துள்ளனர். மேலும் அந்த மோட்டார் அறைக்கு சீல் வைத்துள்ளர்.

