கோவை மாணவி கூட்டு பலாத்காரம் கைதான 3 பேரின் செல்போன்கள் ஆய்வு: மோட்டார் அறையில் மேலும் சிலரை சீரழித்தார்களா? போலீஸ் விசாரணை
கோவை: கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 3 பேரின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மோட்டார் அறையில் மேலும் சிலரை பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடக்கிறது.
கோவையில் கடந்த 2ம் தேதி இரவு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பியான சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்தி என்ற காளீஸ்வரன், இவர்களது உறவினர் குணா என்ற தவசி ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.
விசாரணையில் மூவரும் விமான நிலையம் பின்புறம் உள்ளஅரசு பாலிடெக்னிக் மதில் சுவரை ஏறி குதித்து உள்ளே பாழடைந்த மோட்டார் அறையில் வைத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. எனவே, அந்த மோட்டார் அறை அவர்களுக்கு பழக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும், மேலும் சிலரை அந்த அறைக்கு அழைத்துச் சென்று சீரழித்திருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அவமானம் கருதி போலீசுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அந்த அறையில் வேறு கைரேகைகள், தடயங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மோட்டார் அறைக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த கும்பலுடன் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சுட்டுப்பிடிக்கப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரின் செல்போன்களை தனிப்படை போலீசார் ஆய்வுக்கு கொடுத்துள்ளனர். அதில், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்படுகிறது. அதை வைத்து வேறு யாராவது இவர்களுடன் தொடர்பில் இருந்து குற்றங்கள் செய்து உள்ளார்களா? என்றும், அவர்கள் நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

