சங்ககிரி: சங்ககிரி டோல்கேட்டில், ஆம்னி பஸ்சில் 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், கோவை மற்றும் கடலூரைச் சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.
கோவையில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் சென்ற தனியார் ஆம்னி பஸ், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட் அருகே பயணிகள் டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது, பஸ்சில் பயணம் செய்த கோவை நகை பட்டறை ஊழியர் சங்கர் என்பவர், 3 கிலோ தங்க நகைகளை வைத்திருந்த பையை இருக்கையில் வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, நகைகள் மாயமானது.
இதுகுறித்து சங்ககிரி போலீசில் அளித்த புகாரில், பட்டறையில் இருந்து 3 கிலோ தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக புதுச்சேரிக்கு கொண்டு சென்றபோது கொள்ளையடிக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து, சேலம் எஸ்பி கவுதம் கோயல் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையில், கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கோவைக்குசென்ற தனிப்படை போலீசார், பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட 3 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில், புதுச்சேரியில், தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளி மெரிஜா (28) என்பவரையும் கைது செய்தனர். விசாரணையில், கோவை, சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (57), நகை பட்டறை தொழிலாளியான இவர், சீனிவாசனின் நகை பட்டறையில் இருந்து, நகைகளை விற்பனைக்கு அனுப்புவதை நோட்டமிட்டு, கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா சிலம்பினாதன் பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் மெரிஜா (28) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் ஆம்னி பஸ்சில் செல்ல, பாலசுப்ரமணியன், பஸ்சை பின் தொடர்ந்து பைக்கில் சென்றுள்ளார். பஸ் சங்ககிரி வைகுந்தம் டோல்கேட்டில் நின்றதும் பாலசுப்ரமணியன் மெரிஜாவுக்கு செல்போன் மூலம் சிக்னல் கொடுத்துள்ளார்.
உடனே மெரிஜா, நகை பையை எடுத்துக்கொண்டு, அதே மாதிரியான கருப்பு நிற பையை வைத்துவிட்டு பாலசுப்ரமணியனுடன், பைக்கில் ஏறி தப்பியது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.