Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் அக்டோபர் 9, 10ம் தேதி நடக்கிறது உலக புத்தொழில் மாநாடு முன்னேற்பாட்டு பணி தீவிரம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

சென்னை: கோவையில் அக்டோபர் 9, 10ம் தேதி நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு ஸ்டார்ப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அடுத்த மாதம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு-2025 கோயம்புத்தூரில் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டு பணிகள் தொடர்பாக நேற்று சென்னை, நந்தனம், மெட்ரோ ரயில் வளாகத்தில் உள்ள ஸ்டார்ட்அப் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இந்த மாநாட்டில், உலகநாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட புத்தொழில் செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள், புத்தொழில் மற்றும் புத்தாக்கம் சார்ந்து செயல்படும் 10 ஒன்றிய அரசு துறைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாநில அரசு துறைகள், 9 பிற மாநில புத்தொழில் இயக்கங்கள், 10க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகப்படுத்த வேண்டும். மாநாட்டில் அமைக்கப்படும் கண்காட்சியில் 750 அரங்குகள் முழுவதும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படவேண்டும்.

முக்கியமாக, பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும். எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு தேவையான கிமி தொழில்நுட்பம், ஏரோ ஸ்பேஸ், பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் போன்ற துறைகளின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நம்முடைய தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்திற்கு முன், தமிழ்நாடு எஸ்சி-எஸ்டி புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ் 3 நிறுவனங்களுக்கு ரூ.4 கோடியே 40 லட்சத்திற்கான மானியத்தை பங்குத் தொகையாக அமைச்சர் வழங்கினார்.