கோவை மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைக்கும் பணியை நிறுத்த கோரி வழக்கு: அறநிலையத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோவை, மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில் இந்து அறநிலைய துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் மருதமலை, வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும். நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இப்பகுதியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைப்பதால் வனச்சூழல் பாதிக்கப்பட்டு யானை வழித்தடங்கள் துண்டிக்கப்படும். மேலும் விலங்குகள்-மனித மோதல்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை ஒப்புதல் பெறாமல் இந்த சிலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. எனவே, முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தது.