கோவை அருகே பயங்கரம்: கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த பாட்டியை கொன்ற இளம்பெண்: 6 மாதத்திற்குப்பின் உடலை தோண்டி எடுக்கும் போலீசார்
* கணவரையும் கொல்ல முயன்றபோது இருவரும் சிக்கினர், காட்டி கொடுத்த மகனின் பாடப்புத்தகம்
அன்னூர்: கோவை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட முயன்றபோது சிக்கினார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவை சேர்ந்தவர் லோகேந்திரன் (38). பைனான்சியர். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27). இவர்கள் 7 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். லோகேந்திரன் பெற்றோர் இறந்த நிலையில், தனது தாய் வழி பாட்டி மயிலாத்தாளை (60) தன்னுடன் தங்க வைத்திருந்தார்.
ஜாய் மெட்டில்டா அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தார். இதன் கிளை நிறுவனம் கர்நாடகாவில் உள்ளது. அதில், ஒரு அலுவலகத்தில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை அப்ரூவல் செய்யும் பணி தொடர்பாக இருவரும் அடிக்கடி லேப்டாப் மற்றும் செல்போனில் வீடியோ கால் பேசி வந்தனர்.
இதில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை மீண்டும் அதே லாட்ஜில் சந்தித்துள்ளார். அன்றைய தினம் கள்ளக்காதலனை சந்திக்க ஜாய் மெட்டில்டா வழக்கத்திற்கு முன்பாக வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, வீட்டில் மகனின் பள்ளி பாடப்புத்தகம் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. மகனும் தாயின் ஸ்கூட்டரில் தான் நோட்டு இருப்பதாக தந்தையிடம் கூறினார்.
இதையடுத்து, ஜாய் மெட்டில்டாவை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இதனால் லோகேந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஜாய் மெட்டில்டாவுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்து அன்னூரில் பல இடங்களில் தேட துவங்கினார். அப்போது லாட்ஜில் இருந்து ஜாய் மெட்டில்டா வெளியே வருவதை லோகேந்திரன் நேரில் பார்த்தார். இதுகுறித்து விசாரித்தபோது அலுவலகம் தொடர்பான மீட்டிங் நடைபெற்றதாக ஜாய் மெட்டில்டா தெரிவித்தார்.
சந்தேகமடைந்த லோகேந்திரன் மீட்டிங் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு நாகேஷ் மட்டும் இருந்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் மிரட்டி கேட்கவே, தெரியாமல் தவறு நடந்து விட்டது. இனிமேல் இது போல நடக்க மாட்டேன். மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து லோகேந்திரன் நாகேஷை கண்டித்துள்ளார். மேலும், இது குறித்து நிதி நிறுவனத்தில் புகார் அளிக்கவே, இருவரையும் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி லோகேந்திரன் வெளியூருக்கு சென்றிருந்தார். இது குறித்து ஜாய் மெட்டில்டா கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார். நாகேஷ், கர்நாடகாவில் இருந்து காரில் அன்னூருக்கு வந்தார். ஜாய் மெட்டில்டா வீட்டுக்கு அருகே காரை நிறுத்திவிட்டு வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பாட்டி மயிலாத்தாள் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, இருவரையும் கண்டித்து உறவினர்களுக்கு தெரியப்படுத்த போன் செய்ய முயன்றார்.
பாட்டியை உயிரோடு விட்டால் காட்டிக்கொடுத்து விடுவார் என்று அஞ்சிய கள்ளக்காதல் ஜோடி, தலையணையால் மயிலாத்தாள் முகத்தை அமுக்கி கொன்றனர். அதன்பின், அங்கிருந்து நாகேஷ் தப்பி ஓடிவிட்டார். மாரடைப்பால் மயிலாத்தாள் இறந்து விட்டதாக ஜாய் மெட்டில்டா அழுது புலம்பி நாடகமாடினார். குடும்பத்தினர் இதனை உண்மை என்று நம்பினர். இதைத்தொடர்ந்து, மயிலாத்தாள் உடல் புதைக்கப்பட்டது. கொலையை மறைத்த நிம்மதியில் இருவரும் மீண்டும் உல்லாச வாழ்க்கையை தொடர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் பாட்டியை கொன்றது போல் கணவரையும் கொன்று விட்டு சொத்துக்களை விற்று 2வது திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜாய் மெட்டில்டா கள்ளக்காதலனிடம் யோசனை கூறினார். இதற்கு நாகேஷ் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, கடந்த 22ம் தேதி நாகேஷை, ஜாய் மெட்டில்டா கஞ்சப்பள்ளி வரவழைத்தார். 23ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வீட்டில் லோகேந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு அறையிலும், ஜாய் மெட்டில்டா ஒரு அறையிலும் இருந்தனர். ஜாய் மெட்டில்டா கதவை திறந்து வைத்து நாகேஷை உள்ளே வரவழைத்தார்.
அதன்பின், லோகேந்திரனின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கவே, திடீரென கண்விழித்து அவர் போராட, நாகேஷ் பின்பக்க கதவு வழியாக தப்பி அருகில் இருந்த தோட்டத்துக்குள் ஏறி குதித்து கர்நாடகாவுக்கு தப்பி சென்று விட்டார். இது குறித்து லோகேந்திரன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் அடையாளம் தெரியாத ஒருவர் தனது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொல்ல முயன்றதாகவும், அதன்பின், மற்றொருவரும் தன்னை கொல்ல முயன்றதாகவும் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 28ம் தேதி போலீசார் ஜாய் மெட்டில்டாவின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து கணவரை கொலை செய்ய முயன்றதில் ஜாய் மெட்டில்டாவிற்கும் பங்கு உள்ளது என்பதை லோகேந்திரனிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜாய் மெட்டில்டாவை பார்க்க மீண்டும் நாகேஷ் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதிக்கு காரில் வந்தார். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்தனர். அவரிடமும், ஜாய் மெட்டில்டாவிடமும் விசாரணை நடத்தி இருவரும் சேர்ந்துதான் லோகேந்திரனை கொல்ல முயன்றதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, 2 பேரையும் அன்னூர் போலீசார் கைது செய்தனர். நாகேஷின் சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாட்டியை கொலை செய்ததை யாரும் கண்டுபிடிக்காததால், அந்த தைரியத்தில் கணவரையும் தீர்த்து கட்டிவிட திட்டம் தீட்டியது தெரியவந்தது.
கள்ளக்காதலுக்காக மூதாட்டியை கொலை செய்ததுடன், காதல் கணவரையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் அன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மயிலாத்தாளை கொன்றதாக ஜாய் மெட்டில்டா, நாகேஷ் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மயிலாத்தாளின் உடலை தோண்டி எடுக்கவும், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
* ஒரு கட்டத்தில் பாட்டியை கொன்றது போல் கணவரையும் கொன்று விட்டு சொத்துக்களை விற்று 2வது திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜாய் மெட்டில்டா கள்ளக்காதலனிடம் யோசனை கூறினார். இதற்கு நாகேஷ் சம்மதம் தெரிவித்தார்.
 
  
  
  
   
