மதுக்கரை: கோவை அருகே ஸ்கூட்டரில் கேரளாவுக்கு கடத்திய ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை இன்று போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக ஹவாலா பணம், ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை, கேரள மாநில எல்லையில் உள்ள க.க.சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மொபட்டில் ஒருவர் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அந்த நபர் வந்த மொபட்டை சோதனை செய்தனர். அப்போது பேப்பர் பண்டலில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தொடர் விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம், தொன்னாட்டு பிரம்பை பகுதியை சேர்ந்த சுதீர் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பணத்தை எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

