கோவை பூ மார்க்கெட்டில் பரபரப்பு ஸ்லீவ் லெஸ் போட்டு வரக்கூடாது: சட்டக் கல்லூரி மாணவியை உள்ளே விட மறுத்து வியாபாரிகள் வாக்குவாதம்
கோவை: கோவை பூ மார்க்கெட்டிற்கு ஸ்லீவ் லெஸ் டிரஸ் போட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவியை உள்ளே விட மறுத்து வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை வீரபாண்டி அருகே உள்ள நாயக்கனூர் அண்ணாநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜனனி (20). கடந்த 21ம் தேதி கோவை பூ மார்க்கெட் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் அவரது ஆடை குறித்து விமர்சனம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனை ஜனனி தனது நண்பர் ஒருவர் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், ‘‘பூ மார்க்கெட்டிற்கு இப்படி ஸ்லீவ் லெஸ் டிரஸ் எல்லாம் போட்டுகிட்டு வரக்கூடாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தா என்ன பன்றது’’ என்று மாணவி ஜனனியிடம் பூ மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு மாணவி ஜனனி, ‘‘இது யாருடைய மார்க்கெட். இது பப்ளிக் மார்க்கெட். மார்க்கெட்டிற்கு வந்து போகிறவர்களிடம் இப்படி எல்லாம் பேசாதீங்க. எந்தெந்த டிரஸ் போடனும்னு மார்க்கெட்டில் எழுதி ஒட்டி விடுங்கள். நான் கோர்ட்டில் ஆர்டர் வாங்கி கொடுக்கிறேன்.
அவரவர் டிரஸ் அவரவர் உரிமை. உங்களை யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை. நீங்க ஒழுக்கமா இருந்தால் போதும். என்னுடைய டிரஸ் நான் போட்டு வருகிறேன். நீ போட்டு இருக்கிற பனியன் கூட தான் எனக்கு தெரியுது. என்ன பன்னலாம். நீங்க சால் போட்டு வர்றீங்களா. மார்க்கெட் வந்து போகிறவங்ககிட்ட இப்படி எல்லாம் பேசுவதை முதலில் நிப்பாட்டுங்க. அவங்க டிரஸ் அவங்க உரிமை. உங்களை யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க.
நீங்க யாரெல்லாம் ரூல்ஸ் பேசறீங்களோ அவங்க எல்லாம் கையெழுத்து போட்டு ஒரு பெட்டிசன் கொடுக்கறீங்களா என்று மாணவி ஜனனி கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு அந்த வியாபாரிகள், ஏதாவது புகார் கொடுக்கனும்னா என்ன பன்றது. வக்கீல் யாராவதை தான் அழைக்க வேண்டும் என்கின்றனர். அதற்கு ஜனனி சரி கூப்பிட்டு வாங்க. எனக்கு இப்ப வேலை எல்லாம் ஒன்னும் பெரிதாக இல்லை. நான் காத்திருக்கிறேன் என்கிறார். வியாபாரிகள் சங்க நிர்வாகிதானே. உங்க பெயர் என்ன என்று ஜனனி கேள்வி கேட்கவும் வியாபாரிகள் கலைந்து சென்று விடுகின்றனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஜனனி புகார் அளித்துள்ளார்.