Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கூட்டணி முடிவான பின் முதல்முறையாக கோவை வந்தார்: எடப்பாடியை தனியாக சந்திக்க மறுத்த மோடி; டிடிவி, ஓபிஎஸ்சை மீண்டும் புறக்கணித்தார்

கோவை: கோவையில் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டதால் விமான நிலைய வரவேற்பின்போது கோரிக்கை மனு மட்டும் பெற்றுக்கொண்டார். கோவை பீளமேடு கொடிசியா அரங்​கில், தென்​னிந்​திய இயற்கை விவ​சா​யிகள் கூட்​டமைப்பு சார்​பில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு நேற்று துவங்கியது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இதற்காக நேற்று மதியம் 1.45 மணிக்கு கோவை விமான நிலையம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜ மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே அங்கு இருந்தார். பின்னர், மாலையில் மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி கோவை விமான நிலைய வளாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் (வி.ஐ.பி. ரூம்) சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் எனக்கருதி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்படி அந்த அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பார்கள் எனவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி, வி.ஐ.பி அறையில் தங்கவில்லை.

இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த எடப்பாடி பழனிசாமி, விமான நிலைய வரவேற்பின்போதே, ஏற்கனவே தயாரித்து கொண்டு வந்திருந்த ஒரு கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார். அவரும் அதை புன்னகையுடன் பெற்றுக்கொண்டார். பிரதமர் மோடி டெல்லி திரும்பும்போதும் அவரை வழியனுப்ப எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வந்திருந்தனர். அப்போதும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து பேசவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன், வைத்திலிங்கம், செங்கோட்டையன் போன்ற அதிருப்தி தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க மறுத்துவிட்டார்.

இவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, இதுவரை பிரதமர் மோடியை சந்தித்து பேசியது இல்லை. இவர்கள் சந்திப்புக்கு பிரதமர் மோடி ஒருமுறைகூட அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பு என்ற ஒற்றை கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலம் வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பாஜ தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கு எடப்பாடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் அதிருப்தியில் இருக்கும் பிரதமர் மோடி, எடப்பாடியை தனியாக சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மோடி தனியாக தன்னை சந்தித்தால் தனது கோரிக்கையை ஏற்றதாக எடப்பாடி வெளி காட்டி கொள்வார். இதனால், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் அதிருப்தியடைவர்கள் என கருதியே மோடி சந்திப்பை தவிர்த்தாக கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவே தேவையை என்று பாஜ மேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இது நிறைவேறும் வரை அதிமுக மற்றும் அதிருப்தி தலைவர்களை தனிப்பட்ட முறையில் மோடி சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மோடி தனியாக சந்திக்காததால் எடப்பாடி கடும் அப்செட் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* 9 கோரிக்கைகள் அடங்கிய மனு: மோடியிடம் வழங்கினார் எடப்பாடி

கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 9 கோரிக்கை அடங்கி மனுவை அவரிடம் அளித்தார். அதில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கோயம்புத்தூர்-ராமேஸ்வரம் அகல ரயில் பாதையை விரைந்து முடிக்க வேண்டும். மீண்டும் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க வேண்டும். கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே இரவு நேர ரயில்கள் இயக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கான அத்தியாவசிய உள்ளீடுகளை அதிக மானிய விலையில் வழங்க வேண்டும். இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பயிர்களை நேரடியாக சந்தைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அரசு வழிகள் மூலம் உற்பத்தி, இயற்கை விவசாயத்தை வளர்ப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை மானியங்களை வழங்க வேண்டும். பல மாவட்டங்களில் கரும்பு போன்ற ஒவ்வொரு முதன்மை பயிரும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட வேண்டும். விவசாய மற்றும் வீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப் செட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகக் குறைக்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.