கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும்: மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜிக்கு முதல்வர் உத்தரவு
சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 87 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இதில் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் திமுக செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோவை மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உடனிருந்தார். சந்திப்பின் போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது நமது இலக்கு. அந்த இலக்கை எட்ட அனைவரும் உறுதியோடு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்ஐஆர் பணிகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விசாரித்தார். அப்போது நிர்வாகிகள், அதிமுக பிஎல்ஏ2க்கள் யாருமே களத்துக்கு வருவதில்லை. ஆனால், பணிகளை மேற்கொள்ளும் திமுகவை விமர்சித்து அரசியல் செய்வதாக புகார் தெரிவித்தனர்.


