கோவையில் ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கும்பல் வெறிச்செயல்; 7 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
கோவை: கோவையில் காரில் ஆண் நண்பரை அரிவாளால் வெட்டி கல்லூரி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் பின்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு புதர் மண்டி கிடக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பிருந்தாவன் நகர் பகுதியில் மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், ஒண்டிப்புதூரை சேர்ந்த மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் தனது 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அந்த கல்லூரி மாணவி மற்றும் ஆண் நண்பரிடம் தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த வாலிபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திடீரென அரிவாளால் மாணவியின் நண்பரை தலையில் வெட்டி தாக்கியுள்ளனர். அதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் 3 பேரும் அந்த கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த 3 வாலிபர்களும் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அரிவாள் வெட்டில் மயக்கமடைந்த நிலையில் இருந்த ஆண் நண்பர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயம் அடைந்த ஆண் நண்பரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப்பின் இருட்டில் மறைவான இடத்தில் அரை நிர்வாண நிலையில் தட்டுத்தடுமாறியபடி தவித்த கல்லூரி மாணவி கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவரையும் போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இரவு 11 மணிக்கு கல்லூரி மாணவியை வாலிபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். மாணவியின் நண்பர் தகவலையடுத்து அதிகாலை 4 மணியளவில் தான் மாணவியை போலீசாரால் மீட்க முடிந்துள்ளது. இதுகுறித்து அந்த கல்லூரி மாணவி மற்றும் ஆண் நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: துணை கமிஷனர்கள் தேவநாதன் மற்றும் திவ்யா தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், 60க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் காட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ஒரு மொபட் கைப்பற்றப்பட்டது. அது திருட்டு போன மொபட் என்பது தெரியவந்துள்ளது. அந்த மொபட் மர்ம நபர்கள் வந்ததா? ஏன் போட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. விரைவில் 3 பேரும் பிடிப்படுவார்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
* மாணவியை 5 மணி நேரம் தேடிய போலீஸ், பொதுமக்கள்
மாணவியின் ஆண் நண்பரை தாக்கி மாணவியை 3 பேர் கடத்தி சென்றதில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்ததும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இரவு முழுவதும் போலீசார் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ரயில்வே தண்டவாளம் பகுதியிலும் சென்று போலீசார் தேடினர். 5 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் அதிகாலை 4 மணியளவில் போலீஸ் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மாணவி காயங்களுடன் எழுந்து தடுமாறி வந்துள்ளார். அதன் பின்னர் அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
* சிசிடிவி காட்சிகள் ஆய்வு
தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியை சுற்றிலும் உள்ள சாலைகள், வீடுகள், அலுவலகங்களின் முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா காட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
 
 
 
   