கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை அடையாளம் காட்டுவதற்காக அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சகோதரர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.
அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சை முடிந்த பின்னர் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கிடையே கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் வருகிற 19ம் தேதி வரை 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதேபோல பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலனிடம் வடக்கு ஆர்டிஓ ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், மாணவி முன்பு கைது செய்யப்பட்ட 3 பேரையும் அடையாள அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அடையாள அணிவகுப்பு எங்கு வைத்து நடத்துவது என முடிவு செய்யப்படும். அடையாள அணி வகுப்பு நடந்து முடிந்த பின்னர் காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றனர்.

