Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்; சகோதரர்கள் உட்பட 3 பேர் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு: ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் போலீஸ் அதிரடி, விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் பிடிக்க சென்றபோது ஏட்டுவை வெட்டிவிட்டு தப்ப முயன்ற 2 சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 26 வயது ஆட்டோ கன்சல்டன்சி நடத்தும் வாலிபரும், மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர், அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கார் கண்ணாடி உடைத்து, காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியை முட்புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 7 தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பி ஓடிய 3 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

3 பேரும் தப்பி ஓடும்போது தங்களது மொபட்டை அங்கேயே விட்டுச்சென்றனர். அதன் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அது திருட்டு மொபட் எனவும், இதுதொடர்பான வழக்கு கோவில்பாளையம் காவல்நிலையத்தில் ஏற்கனவே பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு பீளமேடு இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்தனர்.

தகவலறிந்து சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அங்கு விரைந்தது. இரு குழுவினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். போலீஸ் வாகனத்தை பார்த்ததும் பதுங்கி இருந்த 3 வாலிபர்களும் தப்பி ஓடினர். ஆனாலும், போலீசார் விடாமல் அவர்களை துரத்திச்சென்று சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் 3 பேரும் யாரும் கிட்டே வராதீர்கள்.. என்று கூறியபடி, போலீசாரை நோக்கி, அரிவாளால் வெட்டினர். இதில், தலைமை காவலர் சந்திரசேகரின்(47) இடதுகை மணிக்கட்டில் அரிவாள் வெட்டு விழுந்தது.

சுதாரித்துக்கொண்ட போலீசார் 3 பேரையும் காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயம் அடைந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் தாக்கியதில் காயம் அடைந்த தலைமை காவலர் சந்திரசேகரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், மருத்துவமனைக்கு சென்று பிடிபட்ட குற்றவாளிகள் மற்றும் போலீஸ் ஏட்டுவை சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

விசாரணையில், பிடிபட்ட 3 பேரில் சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21) ஆகிய இருவரும் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், குணா என்கிற தவசி (20) மதுரை கருப்பாயூரணி என தெரியவந்தது. இவர்களில், சதீஷ் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் அண்ணன்-தம்பிகள் ஆவர். குணா, இவர்களின் தூரத்து உறவினர். இவர்கள் 3 பேரும் கோவை இருகூர் பகுதியில் அறை எடுத்து தங்கி, கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: நாங்கள் வாரத்தில் 6 நாட்கள் கட்டிட வேலைக்கு செல்வோம். ஒவ்வொரு நாளும் தலா 900 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதை சேர்த்து வைத்து வாரத்தின் இறுதி நாளில் மது குடிப்போம். பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில்தான் எப்போதும் மது குடிப்போம். நாங்கள் அடிக்கடி நடமாடும் இந்த பகுதியில், புதிதாக ஒரு கார் வந்து நிற்பதையும், காருக்குள் காதல் ஜோடி இருப்பதையும் பார்த்தோம்.

அவர்கள் கார் கதவை திறக்கவில்லை. நாங்கள், கதவை திறக்கச்சொல்லி சத்தம் போட்டோம். ஆனாலும், கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரத்தில் கார் கண்ணாடியை உடைத்தோம். அப்போதுதான், காதல் ஜோடி, உள்ளே அரைகுறை ஆடையுடன் இருப்பதை பார்த்தோம். இதில், எங்களுக்கு புத்தி பேதலித்து விட்டது. அதனால், நாங்கள் அந்த வாலிபரை தாக்கி, மயக்கம் அடைய செய்துவிட்டு, இளம்பெண்ணை இருட்டுக்குள் தூக்கிச்சென்று, அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தோம்.

அப்போது அந்த இளம்பெண், என்னை விட்டு விடுங்கள்... நான், கல்லூரி மாணவி... என்றார். உடனே நாங்கள், கல்லூரி மாணவிக்கு இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை? என அவளை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தோம். பின்னர் திருட்டு மொபட்டை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம். காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர் வழியாக சிவகங்கை மாவட்டத்துக்கு தப்பிவிட வேண்டும் என முயன்றோம்.

ஆனால், அதற்குள் எங்களை போலீசார் பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி கூட்டு பலாத்காரத்தை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக, தவெக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

* 24 மணி நேரத்தில் நடவடிக்கை

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து, போலீசுக்கு கடும் நெருக்கடி தரப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கோவை மாநகரை விட்டு குற்றவாளிகள் வெளியே தப்பி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அதன்படி சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில், குற்றவாளிகளை சுற்றிவளைத்து, சுட்டுப்பிடித்தனர்.

* 300 சிசிடிவி கேமரா ஆய்வு

பிருந்தாவன் நகர், பூங்கா நகர் பகுதி மக்கள் இரவு 10 மணிக்கு மேல் சித்ராவில் இருந்து விமான நிலைய ரோட்டை பயன்படுத்துவதில்லை. இந்த பகுதிகளில் சில இடங்களில் சிசிடிவி கேமரா இருந்தும் பழுதாகி உள்ளது. சம்பவ நடந்த பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்துக்கு தனிப்படை போலீசார் 300 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையிலும், அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டியும், போலீசார் குற்றவாளிகளை நெருங்கி பிடித்துள்ளனர்.

* போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்: மகளிர் ஆணையத் தலைவி பாராட்டு

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்த ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமாரி நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது ஒரு கொடூர செயல். முதல்வர் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வழக்குகளில் விரைவான மட்டும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. இவ்வழக்கில் போலீசார் நன்றாக வேலை செய்துள்ளார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் டிஜிபிக்கு டைரக்க்ஷன் பாஸ் பண்ணியுள்ளேன்” என்றார்.

* நடந்தது என்ன? துப்பாக்கிச்சூடு ஏன்? கைதானவர்கள் மீது கொலை, திருட்டு வழக்கு நிலுவை: போலீஸ் கமிஷனர் பேட்டி

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் நேற்று அளித்த பேட்டி: குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, அவர்களில் ஒருவன், போலீசாரை நோக்கி அரிவாளால் வெட்டினான். இதனால், போலீசார் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக, துப்பாக்கியால் அவர்களது கால்களில் சுட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும், கோவை மாவட்டத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வந்துள்ளனர். இங்குள்ள இருகூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை மற்றும் மரம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.

இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, க.க.சாவடி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு, துடியலூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. சமீபத்தில் சத்தியமங்கலத்தில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு 3 பேரும் சேர்ந்து இருகூரில் மது அருந்தியுள்ளனர். அதன்பிறகு மீண்டும் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு, சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதுவும், கோவில்பாளையம் பகுதியில் திருடிய மொபட்டை ஓட்டிக்கொண்டு, மது போதையில் தடுமாறி சென்றுள்ளனர். அங்கு, காரில் நண்பனுடன் அமர்ந்திருந்த இளம்பெண்ணை பார்த்ததும், சல்லாப புத்தியில், அப்பெண்ணை கடத்திச்சென்று, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பிறகு, பல்வேறு தகவல்களை திரட்டி, அதன் அடிப்படையில் குற்றவாளிகள் இருப்பிடத்தை கண்டறிந்து, மடக்கி பிடித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில், காளீஸ்வரன், கருப்பசாமி உள்பட 3 பேருக்கும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், இளம்பெண்னுடன் காரில் இருந்த ஆண் நண்பரை, 3 பேரும் அரிவாளால் வெட்டி, தாக்கியுள்ளனர். கார் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். சம்பவ இடத்தில், மாநகர போலீசார் இரவு 10.30 மணி வரை ரோந்து சென்றுள்ளனர். அதன்பிறகுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பீளமேடு காவல் நிலையத்தில் 5 ரோந்து குழு உள்ளது. இவர்கள் அன்றாடம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த அன்றும் இவர்கள் ரோந்து சென்று வந்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் தினமும் 5 பீட் ஆபீசர், 2 ரோந்து வாகனங்கள் ரோந்து சுற்றி வருகின்றன. சம்பவத்திற்கு சற்று நேரம் முன்புவரை, பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர்.

பாலியல் குற்றவாளிகள் 3 பேரும் கோவை கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்துள்ளனர். அதன்பிறகுதான், துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதிக்கு சென்றுள்ளனர். இரவில், அங்கு தங்குவதற்கு திட்டமிட்டு பதுங்கியிருந்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன், மோதிரம் மற்றும் ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 296(b), 118, 140, 309, 80 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை திரட்டி உள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குற்றவாளிகள் 3 பேருக்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தினோம். ஆனால், அப்படி தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. மது போதையில், பாலியல் இச்சை காரணமாக 3 பேரும், ஆண் நண்பரை தாக்கி, இளம்பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறினார்.

* விரைவில் அடையாள அணிவகுப்பு

போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளிகளை அடையாளம் காட்டவேண்டும் என்பதால், நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்த உள்ளோம். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த ஆண் நண்பர் மற்றும் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது.

மாணவி, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால், அவருக்கு நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது. குற்றச்செயல்களை தடுக்க கோவை மாநகரில் மேலும் 1,400 சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

* குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்தார். அவரிடம் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘உண்மையில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம். அதுவும் நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தருவதும் காவல் துறையின் பொறுப்பு. நிச்சயமாக கண்ணும் கருத்துமாக அதை செயல்படுத்தி, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறேன். அந்த சகோதரிக்கும், அவரது பெற்றோர்க்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இது நடக்க கூடாதது. வருத்தத்தில் இருக்கும் அந்த சகோதரி குடும்பத்துக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.

* குற்றவாளிகளை சுட்டு கொல்ல வேண்டும்: சொந்த ஊர் மக்கள் ஆவேசம்

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரில், சகோதரர்களான சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் இருவரும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களது தந்தை தமிழ்மணி. இவர், பிழைப்பிற்காக கோவைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.

அங்கு கேரளாவை சேர்ந்த பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினரின் மகன்கள் தான் கருப்பசாமி, காளீஸ்வரன். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சுட்டுக் கொன்றால் சந்தோஷம் என கிராம மக்கள் தெரிவித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகராஜா கூறும்போது, ‘‘பாலியல் குற்றச்செயலால் எங்கள் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியது மன வேதனையை தருகிறது. அந்த இரண்டு பேரையும் சுட்டு கொன்றால் தான் சந்தோஷம்’’ என்றார்.

* இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்

மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கும், கோவையில் டூ-வீலர் விற்கும் கன்சல்டன்சி நடத்தி வரும் 26 வயது வாலிபருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர் எனவும், அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர் எனவும் தெரியவந்தது. சமீப காலமாகவே இன்ஸ்டா மூலம் ஏற்படும் பழக்கம் விபரீத்தில் முடிந்து வருகிறது.

இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடும் பெண்களின் போட்டோ, வீடியோக்களுக்கு லைக் போடும் வாலிபர்கள், அவர்களுக்கு மெசெஜ் செய்து நட்பை தொடர்கின்றனர். இதில் சிலர் வக்கிர புத்தியுடன் ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இன்ஸ்டாவால் தற்போது இளைய சமுதாயம் சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

* ‘காவலர் செயலியை பயன்படுத்தலாம்’

பெண்கள், ஆபத்தான காலத்தில் போலீசாரை தொடர்பு கொள்ள காவல் உதவிஆப் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் ‘எஸ்ஓஎஸ்’ பட்டனை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல்துறைக்கு புகார் செல்லும். லொக்கேஷனை கண்டறிந்து யாரேனும் ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். மாணவிகளின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் அக்கா’, மாணவர்களின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் புரோ’ திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது என்று போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார்.