Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை கல்லூரி மாணவி விவகாரத்தில் போராட்டம் பாஜ அரசியலுக்காக போடும் வேடம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: கோவை மாணவி கல்லூரி விவகாரத்தில் பாஜ போராட்டம் அரசியலுக்காக போடும் வேடம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிட கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கொளத்தூர் ராஜாஜி நகரில் மூத்த குடிமக்களுக்காக கட்டப்பட்டு வரும் உறைவிடம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அறநிலையத்துறை சார்பில் பழனி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. திமுக ஆட்சி அமைந்து 10 கல்லூரி அமைக்கப்படும் என்று கூறப்பட்டு முதல்வரின் விடாமுயற்சி காரணமாக 4 கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதில், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

புதிதாக கட்டப்படும் கல்லூரியில் 24 வகுப்பறைகள், 2 ஆய்வகம், நூலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரில் உண்மைத்தன்மை இருந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். கோவை மாணவி வன்கொடுமை விவகாரத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டு பிடித்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சட்டத்தின் ஆட்சி இந்த ஆட்சி. இன்னார் இனியவர் என்று பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு நிலைத்திருக்கிறது. மணிப்பூரை போன்று கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆட்சி உறங்கவில்லை. இது போன்ற பிரச்னைகளை எடுத்து பாஜ ஆடுவது தேர்தலை மையப்படுத்தி நடத்தும் போராட்டமே தவிர உண்மையாக நடக்கும் போராட்டம் இல்லை.

அவர்களுக்கே தெரியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக போடுகின்ற வேடம். நயினார் நாகேந்திரன் மகன் மீது பதியப்பட்ட வழக்கு தன் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக அவருடைய சட்ட மீறல்களுக்காக பதியப்பட்ட வழக்கா, இல்லை கட்சிக்காக பதியப்பட்ட வழக்கா?. இவ்வாறு அவர் கூறினார்.