Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் ரூ.80 கோடி சொத்தை அடிமாட்டு விலைக்கு அண்ணாமலை வாங்கியது எப்படி? பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் ரகசிய அறிக்கை

கோவை: ரூ.80 கோடி சொத்தை, குறைந்த விலைக்கு வாங்கியதுபோல பதிவு செய்து அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், அவருக்கு இவ்வளவு சொத்து வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ரகசிய அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தார். கடைசியாக பெங்களூரு நகர துணை கமிஷனராக பணியாற்றினார். கடந்த 2020ல் ஐபிஎஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, தமிழக பாஜவில் இணைந்த அவருக்கு, குறுகிய காலத்தில் மாநில தலைவர் பொறுப்பு கிடைத்தது. 2021 ஜூலை முதல் 2025 ஏப்ரல் வரை பாஜ மாநிலத் தலைவராக பணியாற்றினார். தற்போது பாஜவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப் அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் இருந்து வாங்கி உள்ளனர். இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த நிலத்தை ஒட்டி நொய்யல் ஆறும் உள்ளது.

நொய்யல் ஆற்று நிலத்தையும் அண்ணாமலை ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது. இதை மறைத்து மொத்த நிலத்திற்கும் சேர்த்து வெறும் ரூ.4.5 கோடியை செக்காக கொடுத்து நிலம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 4.5 கோடி ரூபாயும் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை வாங்கிய நிலத்திற்கான பத்திரப்பதிவு தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. ஆனால், அண்ணாமலை காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ததாக இல்லாத அலுவலகத்தில் பதிவு நடந்ததாக பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை மாநில தலைவரான பிறகு, திண்டுக்கல் மாவட்டத்தில் மைத்துனர் சிவக்குமார் மற்றும் நண்பர் செந்தில்குமார் பெயரில் செங்கல் சூளை தொடங்கினார். ரஷ்யாவின் உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் இருந்து நவீன இயந்திரங்களை வாங்கி வந்து இந்த சூளையை தொடங்கினார். இன்று தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் செங்கல்சூளையாக அது விளங்குகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். வசதி குறைவான மைத்துனர் எப்படி பல கோடி மதிப்பிலான செங்கல் சூளையை தொடங்கினார் என்பதற்கு இதுவரை பதில் இல்லை.

மேலும் மணல் அதிபர்களை மிரட்டி பணம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டும் இருந்தது. மேலும் அவர்களிடம் குறைந்த விலைக்கு மணல் வாங்கித்தான் சூளை நடத்தினார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு அறிக்கை கொடுத்தார். அதன்பின்னர்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் இந்த சொத்து வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து நிர்மலா சீதாராமன் ரகசிய அறிக்கை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு அரசு ஊழியர் பதவியை ராஜினாமா செய்தாலோ, ஓய்வு பெற்றாலோ அடுத்த 5 ஆண்டுகளும் அவர் அரசு ஊழியரின் சட்டத்துகள்தான் வருவார். அதன்படி அண்ணாமலை 2020ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேர்ந்தார். இவர், சரியாக 5 ஆண்டுகள் முடிந்த பிறகுதான் இந்த சொத்தை தனது மனைவி பெயருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. சிலரோ அவர் ஓய்வு பெற்று இன்னும் 5 ஆண்டுகள் ஆகவில்லை. இதனால் அவர் மீது கர்நாடகா அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், அவர் மீது கர்நாடகா அரசு, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்ததாக வழக்குத் தொடருமா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. மேலும் நிர்மலா சீதாராமனுக்கும், அண்ணாமலைக்கும் மோதல் எழுந்துள்ளதால், வருமானவரித்துறையும் இது குறித்து விசாரணையை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.