*கல்லால் மண்டையை உடைத்தார்
கோவை : கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் ஜிஎம் நகரில் உள்ள சத்துணவு கூடத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாந்தி வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது யாசகம் கேட்கும் முதியவர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இதனை பார்த்த சாந்தி அந்த முதியவர் தன்னை தான் திட்டுவதாக நினைத்து அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த முதியவர் அங்கிருந்து செல்லாமல் மீண்டும் அவரை பின் தொடர்ந்தார்.
இதனால் சாந்தி அவரை தாக்கியதாக தெரிகிறது. அதில் ஆத்திரம் அடைந்த அந்த முதியவர் கீழே கிடந்த கல்லை எடுத்து சாந்தியின் தலையில் தாக்கினார்.
பலத்த காயம் அடைந்த அவருக்கு ரத்தம் கொட்டியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த சாந்தியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கல்லால் தாக்கியது அந்த பகுதியில் சுற்றி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட யாசகர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.