பாலக்காடு: கோவையிலிருந்து கேரளாவிற்கு அரசு பஸ்சில் கடத்திய 4.120 கிலோ கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். கேரள-தமிழக எல்லையான கோவை அடுத்து உள்ள வாளையார் கலால்த்துறை சோதனைச்சாவடியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருச்சூருக்கு நோக்கி சென்ற கேரள மாநில அரசு பஸ்சை தடுத்து பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணியின் பேக்கில் 4 கிலோ 120 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த பனச்சிக்காட்டைச் சேர்ந்த ஷாததுவின் மகன் அப்ஷல் (19) என தெரியவந்தது. இவர் கோவையில் கஞ்சா வியாபாரிகளிடமிருந்து ரூ.34 ஆயிரத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து அவற்றை கோட்டயத்தில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனைக்கு செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அப்ஷல் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.