கோவை: கோவையில் ஆன்லைன் முன்பதிவு பணத்தை திரும்பப் பெறும் மோசடி அதிகரித்து வருவதாக பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த 60 வயது மூதாட்டியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18 லட்சம் மோசடி செய்துள்ளதாக சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. மூதாட்டி ஆன்லைன் மூலமாக ஓட்டல் அறை ஒன்றை புக் செய்துள்ளார்.
இதையடுத்து மூதாட்டி அறையை ரத்து செய்து, முன்பதிவு பணத்தை திரும்பப் பெற இணையதளத்தை தேடியபோது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கூறி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை உள்ளீடு செய்துள்ளார். இதையடுத்து சில மணி நேரங்களிலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.18 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக மூதாட்டி கோவை சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், முன்பதிவுகளை ரத்து செய்த பிறகு பணத்தை திரும்ப பெறுபவர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி செய்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 7 மாதத்தில் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ரூ.1,010 கோடியை இழந்தனர். சைபர் கிரைம் மோசடி தொடர்பாக கடந்த 7 மாதத்தில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.314 கோடியை தமிழக சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். டிஜிட்டல் கைது மூலமாக பொதுமக்கள் ரூ.97 கோடியை இழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.