கோவை ஃபிளிப்கார்ட் கிடங்கில் ஆய்வு: காலாவதியான பேரீச்சை பழங்களை அழித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கோவை: கோவை ஃபிளிப்கார்ட் கிடங்கில் காலாவதியான பேரீச்சை பழங்களை அழித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டெலிவரி நிறுவனத்தின் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது கிடங்கில் இருந்த ஒரு பகுதியில் காலாவதியான பேரீச்சை பழங்கள் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடந்த மே 19ம் தேதியே பேரீச்சை பழங்கள் காலாவதியான நிலையில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் பேரீச்சை பழங்கள் அனைத்தும் டெலிவரி நிறுவனத்தின் கிடங்கிலேயே வைக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து உடனடியாக 278 கிலோ பேரீச்சை பழங்கள் முழுமையாக நோய் எதிர்ப்பு திரவியங்கள் கொண்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 2 மாத காலம் வரை காலாவதியான பேரீச்சம் பழங்களை எதற்காக அந்த கிடங்கில் வைத்திருந்தார்கள் என்பது குறித்து விளக்கம் கேட்டு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலமாக அந்நிறுவனத்திற்கு தற்போது நோட்டீஸ் வழங்கினர் . காலாவதியான பொருட்கள் குடோனில் வைத்திருந்தாலும் அதற்கான அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். அத்தகைய கட்டுப்பாடுகளையும் அந்நிறுவனம் மீறியதாக குற்றசாட்டு தெரிவிக்கப்பட்டது.