கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்; கைதான 3 வாலிபர்களை ஒரு நாள் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
கோவை: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 வாலிபர்களையும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். 3 பேரும் சிகிச்சை முடிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மத்திய சிறையில் ஜே.எம். 1 நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் கடந்த வாரம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது மாணவி மற்றும் அவரது காதலன் 3 வாலிபர்களை அடையாளம் கண்டு உறுதி செய்தனர்.
இதற்கிடையே மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதற்கான பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக கைதான 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பீளமேடு போலீசார் கூடுதல் மகிளா கோர்ட்டில் கடந்த 24ம் தேதி மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அறிவுறுத்தி இருந்தார். அதன் பேரில் நேற்று போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். காலில் குண்டு அடிபட்டுள்ளதால் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலி மூலம் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி 3 பேரையும் ஒரு நாள் அதாவது நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து 3 பேரையும் அழைத்து சென்றனர். அவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மற்றும் பீளமேடு போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

