கோவில்பட்டி: நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போக்குவரத்து எஸ்ஐ மற்றும் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக செல்வகுமார் (36) வேலைபார்த்து வந்தார். அதே பிரிவில் இந்திராகாந்தி (32) என்பவர் காவலராக வேலைபார்த்து வந்தார். இருவரும் கடந்த மாதம் 17ம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். இப்பிரச்னை வெளியே தெரிந்ததால் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யபப்பட்டனர்.
இதற்கிடையே, காவலர் இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்னை குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமாணி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, காவல்துறையின் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக பெண் காவலர் இந்திராகாந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். காவலர் இந்திராகாந்தி வெளியூரில் இருப்பதாக கூறியதால் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் அவரது வீட்டில் சஸ்பெண்ட் உத்தரவை ஒட்டிச் சென்றனர்.