Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்த ரூ.100 கோடியில் இணை உருவாக்க நிதியம்: கோவையில் நடந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலை வலுப்படுத்தும் வகையில் ரூ.100 கோடி செலவில் இணை உருவாக்க நிதியம் உருவாக்கப்படும் என கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (ஸ்டார்ட் அப் தமிழ்நாடு) சார்பில் 2 நாட்கள் நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாடு நேற்று துவங்கியது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை 2025 மற்றும் ஸ்டார்ட் அப் விசன் 2035 ஆகிய அறிக்கைகளை அவர் வெளியிட்டார். பல்வேறு புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைத் தொகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் தலா ரூ.5 லட்சம் வீதம் 8 பேருக்கு மொத்தம் ரூ.40 லட்சம் மானியத்துடன் கூடிய அனுமதி ஆணைகளையும் அவர் வழங்கினார். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதுதான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. அந்த பயணத்தில், ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த உலகப் புத்தொழில் மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்த வாய்ப்புகள், எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். குறிப்பாக, பின்தங்கிய நிலையில், விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். புத்தொழில் கொள்கையிலும் சமூகநீதி. அதுதான், திராவிட மாடல் பாலிசி. இப்படி, நாம் எடுத்துக்கொண்டு வருகின்ற தொடர் முயற்சிகளால், தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலில், குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில், அதற்கு முன்னால் இருந்ததை விட, ஆறு மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தளத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2 ஆயிரத்து 32-ஆக இருந்த எண்ணிக்கை, இப்போது 12 ஆயிரத்தையும் தாண்டி உயர்ந்திருக்கிறது. இந்த 12 ஆயிரத்தில் சரிபாதி நிறுவனங்கள் பெண்கள் தலைமையேற்று நடத்துகின்ற நிறுவனங்கள். சிறந்த புத்தொழில் கட்டமைப்பு கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில், 2018-ஆம் ஆண்டு கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, நான்கே ஆண்டுகளில், 2022ம் ஆண்டு முதல் இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. ‘ஸ்டார்ட்-அப் ஜீனோம்’ அமைப்பு வெளியிட்ட ‘உலகளாவிய புத்தொழில் சூழமைவு அறிக்கை 2024’ல் ஆசிய அளவிலேயே 18வது இடத்தில் சென்னை இருக்கிறது.

நிதி ஆயோக்கின்கீழ் செயல்படும் ‘அட்டல் இன்னோவேஷன் மிஷன்’ அமைப்பானது புத்தாக்க சூழமைவு சிறப்பாக இருக்க மாநிலங்களில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை அங்கீகரித்திருக்கிறது. 2021-2024ம் ஆண்டு காலத்தில், சென்னையை மையமாக கொண்ட உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு - 66 விழுக்காடு ஆண்டு கூட்டு வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தேசிய அளவில் இது 2வது இடம். இந்த சாதனைப் பட்டியலின் பின்னணியில் நாம் வடிவமைத்து செயல்படுத்தி வருகின்ற பல திட்டங்கள் இருக்கிறது. புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மெட்ரோ சிட்டியை தாண்டி, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்று கோல் செட் செய்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதன்படி, 11 வட்டார மையங்களை அமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில், அதிகரித்து வருகின்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, இந்த நிதியாண்டில், இந்தத் திட்டத்திற்கு மட்டுமே ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எந்தத் துறையாக இருந்தாலும், எங்களுக்கு சமூகநீதி முக்கியம்.

அப்படித்தான், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களால் நிர்வகிக்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு வழங்கப்பட்டு வருகிறது. முதலீடு வழங்குவதோடு, அந்த நிறுவனங்களுக்குத் தேவையான தொழில் பயிற்சிகளும் துறை வல்லுநர்களால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதற்காக, 2022-2023-ஆம் ஆண்டில், ரூ.30 கோடி ஒதுக்கீடு என்பதை, 2023-24ஆம் ஆண்டு ரூ.50 கோடியாக உயர்த்தி இருக்கிறோம். கிராமந்தோறும் புத்தொழில் திட்டம் என்று ஊரகப்பகுதிகளிலும் புத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்து வருகிறோம். அதே நேரத்தில், உலகளாவிய தொடர்புகளையும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி வழங்கி வருகிறோம்.

நாட்டிலேயே, புத்தொழில் நிறுவனங்களுக்காக, 40 உலக நாடுகளின் பங்களிப்போடு ஒரு சிறப்பு மாநாடு நடத்தப்படுவது இதுதான் முதல் முறை. பன்னாட்டு புத்தொழில் அமைப்புகள், இந்தியாவில் செயல்படுகின்ற பெரு நிறுவனங்கள், ஒன்றிய அரசின் புத்தொழில் அமைப்புகளுடன் இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. குறிப்பாக, ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஆசியா பெர்லின்’ அமைப்பு, அமெரிக்காவின் சான்டா கிளாரா பல்கலைக்கழகம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லிங்க் இன்னோவேஷன்ஸ்’ அமைப்பு மற்றும் கனடா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்தொழில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும். மேலும், பல திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைக்க என்னென்ன செய்யவேண்டும் என்கின்ற கருத்துக்களை உள்ளடக்கிய ‘விஷன் 2035’ தொலைநோக்கு அறிக்கையோடு முதல்நிலை செயல்திட்ட வரைவை இன்று வெளியிட்டிருக்கிறேன். புத்தொழில் சார்ந்த தரவுகளை வெளியிடுவதில், புகழ்பெற்ற அமைப்பான ‘ஸ்டார்ட் அப் ஜீனோம்’-தான் இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறார்கள். மாநிலத்தின் புத்தொழில் சூழல் மேம்பாட்டிற்கான வழிகாட்டி செயல்திட்டங்கள் உள்ளடங்கிய இரண்டாம் தொகுப்பு இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும். இன்று, தமிழ்நாட்டின் புத்தொழில் சூழல் குறித்த ‘இன்க்-42’ நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறேன்.

இந்த 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழல் அடைந்திருக்கின்ற வளர்ச்சியை ஆதாரங்களுடன் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மாநாடு - தொழில்முனைவு ஆர்வலர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மாணவ மாணவியர் என்று எல்லோருக்குமானது. நம்முடைய மாநிலத்தின் புத்தொழில் சூழலை வலுப்படுத்தும் விதமாக ரூ.100 கோடி ஒதுக்கீட்டில், ‘இணை உருவாக்க நிதியம்’ தொடங்கப்படும். தமிழ்நாட்டு புத்தொழில் நிறுவனங்களில், முதலீடு செய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும். இந்த நிதியம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தால் நிர்வகிக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாட்டில் புதிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள் உருவாகும். மேலும், உலக அளவில் முன்னணியில் இருக்கின்ற முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.