தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் வாயிலாக சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சான்றிதழ் பாடங்கள் அனைத்தும் செயல்முறை விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சியாளர்களை செயல்முறை விளக்கங்களில் ஈடுபடுத்தி அனைத்து தொழில்நுட்பங்களையும் அறியச் செய்து அவர்களை சுயதொழில் மேற்கொள்பவராகவும், தொழில் முனைவோராகவும் உருவாக்குவதற்கு உறுதுணையாய் அமைகின்றன. இதில் குறிப்பாக தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற சான்றிதழ் பாடம் மற்றும் தென்னை உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற பட்டயப்படிப்பும் தொலைதூரக்கல்வி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் தென்னை உலகளாவிய விவசாயத்தில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை நிலைப்படுத்துகிறது. இத்தகைய தென்னை சாகுபடி குறித்து அறிந்துகொள்ளும் வகையிலான தென்னை சாகுபடி தொழில்நுட்பம் என்ற இந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பானது பாரம்பரிய சாகுபடி முறையை அதிநவீன அறிவியல் முறைகளுடன் ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான வளமாகும். இது பல்வேறு வகையான ரகங்களைத் தேர்ந்தெடுப்பது, துல்லியமான ஊட்டச்சத்து மேலாண்மை, நவீன நீர்பாசன உத்திகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை அம்சங்களை உள்ளடக்கியது. கூடுதலாக இடைவெளி, உரமிடல் மற்றும் தென்னையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். இந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு பாடமானது விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு ஒரு மதிப்புமிக்க கல்வியாக இருக்கும்.
தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். தேர்ச்சி, தோல்வி அடைந்த மாணவர்கள் இதில் சேரலாம். தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. 5 மாதங்களுக்கு சனிக்கிழமை தோறும் வகுப்புகள் நடத்தப்படும். 6வது மாதம் தேர்வு நடைபெறும். வயது வரம்பு இல்லை. இதற்கு பயிற்சி கட்டணம் ரூ.2500 செலுத்தினால் போதும்தென்னை உற்பத்தித் தொழில்நுட்பங்கள் குறித்த பட்டயப் படிப்பில் சேர்வதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தமிழ்தான் பயிற்றுமொழி. ஓராண்டில் இரண்டு பருவங்களாக வகுப்பு நடைபெறும். அதுவும் மாதம் ஒரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பயிற்சி நடைபெறும். வயது வரம்பு இல்லை. இரண்டு பருவங்களுக்கும் சேர்த்து ரூ.20,000 பயிற்சிக்கட்டணம். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககத்தைத் தொடர்புகொள்ளலாம்.