புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
புதுடெல்லி: இந்தியா 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க சுத்தமான மின் திறன் இலக்கை எட்டினால் 2030ம் ஆண்டுக்கு முன் நிலக்கரி மின்சாரம் உச்சத்தை காணும் என்று புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் சுத்தமான மின்சார வளர்ச்சி கூர்மையாக அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டில் 29 ஜிகாவாட் புதைபடிவமற்ற மின் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டது.
மேலும் 2025ம் ஆண்டின் முதல் பாதியில் 25ஜிகாவாட் அதிகமாகும். பிரதமர் மோடி நிர்ணயித்த இந்தியாவின் 500ஜிகாவாட் புதைபடிவமற்ற மின் உற்பத்தி திறனை அடைவது உண்மையில் 2030ம் ஆண்டுக்கு முன் நிலக்கரி மின்சாரத்தின் உச்சத்தை எட்டக்கூடும். விரைவான பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு ஏற்கனவே 2030ம் ஆண்டு காலக்கெடுவுக்கு முன்பே 50 சதவீதத்தை தாண்டி விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
