Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதில் அலட்சியம்; சர்வதேச பருவநிலை மாற்ற குறியீட்டில் 10ல் இருந்து 23வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா

புதுடெல்லி: தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் இருந்த இந்தியா, தற்போது 13 இடங்கள் பின்தங்கி 23-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ‘ஜெர்மன்வாட்ச், நியூகிளைமேட் நிறுவனம் மற்றும் கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க்’ ஆகிய அமைப்புகள் இணைந்து ஆண்டுதோறும் வெளியிடும் பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு பட்டியல், 63 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வெளியிடப்படுகிறது. பசுமைக்குடில் வாயு வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி பயன்பாடு மற்றும் காலநிலை கொள்கை ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது.

இதில், கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து ‘உயர் செயல்திறன்’ கொண்ட நாடாக இந்தியா மதிப்பிடப்பட்டு வந்தது. இந்த ஆண்டுக்கான குறியீட்டில் 10வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது வெளியிடப்பட்டுள்ள 2026ம் ஆண்டுக்கான பட்டியலில் 13 இடங்கள் பின்தங்கி, 23வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன்மூலம், ‘நடுத்தர செயல்திறன்’ கொண்ட நாடுகள் பிரிவிற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த திடீர் சரிவிற்கு முக்கியக் காரணம், நிலக்கரி பயன்பாட்டைக் குறைப்பதற்கான உறுதியான தேசிய காலக்கெடு எதுவும் இல்லாததும், மாறாக நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடுவதும் தான் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்தியாவில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அதனால் நில உரிமை மோதல்கள், மக்கள் இடப்பெயர்வு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 2035 மற்றும் 2040ம் ஆண்டுகளுக்கான இடைக்கால இலக்குகள் இல்லாதது ஒரு குறைபாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், எந்தவொரு நாடும் இலக்கை முழுமையாக அடையாததால் முதல் மூன்று இடங்கள் காலியாக உள்ளன. டென்மார்க் 4வது இடத்தையும், இங்கிலாந்து 5வது இடத்தையும், மொராக்கோ 6வது இடத்தையும் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.