பொதுமக்கள் இடையே அதிகரித்துவரும் CNG, PNG பயன்பாடு: செங்கல்பட்டு,காஞ்சிபுரம் குழாய் எரிவாயு இணைப்புக்கு வரவேற்பு
சென்னை: இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குழாய் எரிவாயு இணைப்புக்கு இல்லத்தரசிகள் மாறி வருகிறார்கள். பெட்ரோல், டீசல் மற்றும் LPG எரிவாயுவிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட CNG எனப்படும் இயற்கை எரிவாயு வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது. பெரும்பாலும் ஆட்டோக்கள், வாடகை கார் ஓட்டுநர்கள், CNG -க்கு மாறி வருகின்றன.
இதே இயற்கை எரிவாயு பைப் வழியாக வீடுகளுக்கு வழங்கப்படும் PNG என்ற இணைப்பைப் பெற செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இல்லத்தரசிகள் இடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகளுக்கு அதிக அளவில் PNG இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயன்படுத்த எளிதாகவும், லாபகரமாகவும் இருப்பதாக பயனாளர்கள் கூறுகின்றனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 5000 வீடுகளுக்கு குழாய் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ள தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 50,000 இணைப்புகளுக்கு விண்ணப்பமும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுவரை 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரும்பு குழாய்களும், 390 கிலோ மீட்டருக்கு தொலைவுக்கு பிளாஸ்டிக் குழாய்களும் பதித்து இந்த நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகித்து வருகிறது. ஒரே இணைப்பில் கேஸ் அடுப்பு, வாட்டர் கீட்டருக்கு எரிவாயு வழங்கப்படுவதோடு போதிய பாதுகாப்பு அம்சங்களும் செய்து தரப்படுவதால், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் குழாய் எரிவாயு இணைப்புக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.