சிஎம்டிஏ சார்பில் அயனாவரத்தில் ரூ.6.50 கோடியில் முதல்வர் படைப்பகம்: கட்டிட பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
சென்னை: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, அயனாவரம் யுனைடெட் இந்தியா நகரில் செயல்பட்டு வரும் பொது நூலகத்தை மேம்படுத்தி, சி.எம்.டி.ஏ. சார்பில் புதிய ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் படைப்பகம் கட்டுவதற்கான பூமிபூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் ,சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பணிகளை தெடாங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னையில் 30 முதல்வர் படைப்பகங்கள் அறிவிக்கப்பட்டு, 2 முதல்வர் படைப்பகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று அயனாவரம், யுனைடெட் இந்தியா நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் 13,070 சதுர அடியில், தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய புதிய ‘முதல்வர் படைப்பகம்’ அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், மண்டலக் குழுத்தலைவர் ஜெயின், உள்ளாட்சி பிரதிநிதிகள் வே.வாசு, வேதா, மாமன்ற உறுப்பினர் லதா வாசு, துணை இயக்குநர் (பொது நூலகம்) தனலஷ்மி, மாவட்ட நூலக அலுவலர் முனைவர் மு.கவிதா, அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.