நெல்லையில் ஆணவக் கொலையான ஐடி ஊழியர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்: தந்தையுடன் செல்போனில் பேசினார்
தூத்துக்குடி: நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் செல்வ கணேசின் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் (27). சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்த பட்டாலியன் போலீசில் எஸ்ஐக்களாக பணியாற்றி வந்த சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளும், சித்த மருத்துவருமான சுபாஷினியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 27ம் தேதி பாளை கேடிசி நகருக்கு தாத்தாவுடன் வந்த கவின் செல்வகணேஷை, சுபாஷினியின் தம்பி சுர்ஜித் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாளை போலீசார், சுர்ஜித், எஸ்ஐ சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். பின்னர் அவர், கவின் செல்வகணேசின் தந்தை சந்திரசேகரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார். இதே போல் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இவ்வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.