முசிறி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை
சென்னை: முசிறி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம் வெற்றி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.
கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள். இன்னும் மக்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார். கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி ஏற்க வேண்டும் உள்பட தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சந்திப்பின் போது நிர்வாகிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.