தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.
விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட 40-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தென்காசி விபத்தில் பலியான 6 பேரில் மூவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. 1.வனராஜ் (36) புளியங்குடி, 2. தேன்மொழி (55) கடையநல்லூர், 3. மல்லிகா (55) புளியங்குடி ஆகியோர் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.



